Sunday 4 January 2015







கோப்புப்படம்.















முன்பெல்லாம் தங்க நகைகளை நம்பிக்கையின் அடிப்படையில் நன்கு பழகிய கடைகளில்தான் வாங்கினார்கள். ஆனால், இன்றோ ஹால்மார்க் முத்திரை வந்துவிட்டது. இந்த முத்திரை பொறித்த நகைகளை வாங்கினால் போதும், தங்கத்தின் தரத்திற்கு கியாரண்டி. இந்த ஹால்மார்க் முத்திரை எவ்வாறு வழங்கப்படுகிறது?

ஹால்மார்க்!

சுத்தமான தங்கம் என்பதன் அடையாளமாக காட்டப் படுவதுதான் ஹால்மார்க் முத்திரை. தங்கத்தில் 24, 22, 18, 14, 10, 9, 8 கேரட்கள் உள்ளன. இதில் 24, 22, 18 கேரட் மட்டுமே பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது. 24 கேரட் என்பது 99.9% சுத்தமான தங்கம். முதலீட்டு அடிப்படையில் தங்கக் கட்டிகளாக வாங்குகிறவர்கள் இந்த 24 கேரட் தங்கத்தையே வாங்குவார்கள். இந்த 24 கேரட் தங்கத்தின் விலை 22 கேரட் தங்கத்தைவிட சற்று கூடுதலாக இருக்கும். இந்த சுத்த தங்கத்தைக் கொண்டு ஆபரணங்கள் செய்ய முடியாது என்பதால், சில உலோகங்களைச் சேர்த்து 22 கேரட் மற்றும் 18 கேரட்களில் நகை செய்கிறார்கள். இந்த நகையைதான் ஆபரணத் தங்கம் என்கிறோம்.

அதிக அளவில் உலோகத்தைக் கலக்கும்போது தங்கத்தின் சுத்தத் தன்மை குறைந்துவிடுகிறது. வாங்கும் போது 22 கேரட்டுக்கான விலை கொடுத்து வாங்கிவிட்டு, விற்கும்போது அது வெறும் 18 கேரட் தங்கம்தான் என்பது தெரியவரும்போது வாங்கியவர்கள் நொந்துபோய் விடுகிறார்கள்.

யார் வழங்குகிறார்கள்?

இந்திய அரசின் தரக்கட்டுப்பாடு அமைப்பான 'பீரோ ஆஃப் இந்தியன் ஸ்டாண்டர்டு’ (பி.ஐ.எஸ்.) என்கிற அமைப்புதான் இந்த ஹால்மார்க் முத்திரையைத் தருகிறது. ஹால்மார்க் முத்திரை வழங்கும் டீலர்கள் நாடு முழுக்க இருக்கிறார்கள். இந்த முத்திரை வழங்குவதற்கு பி.ஐ.எஸ். அமைப்பு இவர்களுக்கு லைசென்ஸ் தந்திருக்கிறது. இந்த லைசென்ஸ் பெற்ற டீலர்கள் மட்டுமே ஹால்மார்க் முத்திரை வழங்க முடியும்.

தர பரிசோதனை!

தங்களுக்குத் தேவையான நகைகளை பொற்கொல்லர்களை வைத்து செய்வது தான் நகைக் கடைகளின் முந்தைய வழக்கம். ஆனால், இப்போதோ வளையலுக்கு ஒருவர், நெக்லஸுக்கு ஒருவர், மோதிரத் திற்கு இன்னொருவர் என பலரிடமிருந்து நகைகளை மொத்தமாகச் செய்து, அதை வாங்கி விற்கின்றனர் நகைக் கடைக்காரர்கள். இப்படிச் செய்யப்படும் நகைகளை ஹால்மார்க் டீலர்களிடம் கொடுத்து நகையின் தரத்தைப் பரிசோதிக்கின்றனர்.

இப்படி தரம் பரிசோதிக் கப்பட்ட நகைகள் 22 கேரட் எனில் 91.6% ஹால்மார்க் முத்திரையைத் தருகின்றனர். 18 கேரட் நகை எனில் 75% ஹால்மார்க் முத்திரை தருவார்கள். எனவே, ஹால்மார்க் முத்திரை இருக்கிறதா என்று பார்ப்பதோடு, அது 91.6 சதவிகிதமா, இல்லை 75 சதவிகிதமா என கட்டாயம் பார்ப்பது அவசியம்.

முத்திரையில் ஏமாற்றினால்..?

நகை வாங்கும்போது 22 கேரட் என வாங்கிவிட்டு, விற்கப் போகும்போது 18 கேரட் என தெரிய வந்தால் உடனடியாக பி.ஐ.எஸ். அலுவலகத்தில் புகார் தெரிவிக்கலாம். சென்னை, கோயம்புத்தூர் ஆகிய ஊர்களில் இந்த அலுவலகம் இருக்கிறது. தரம் குறைவாக இருக்கும் நகையை அவர்கள் பரிசோதித்து புகார் உறுதி செய்யப்பட்டால் அந்த ஹால்மார்க் முத்திரை வழங்கிய டீலரின் லைசென்ஸை உடனடியாக ரத்து செய்வார்கள்.

எந்த கடையில் நகை வாங்கினோமோ அந்தக் கடை கண்டிப்பாக நஷ்டஈடு வழங்கியாக வேண்டும். ஒருவேளை நஷ்ட ஈடு தர மறுத்தால் நுகர்வோர் நீதிமன்றத்தை அணுகலாம். சின்ன மோதிரமோ, காதில் அணியும் தோடோ அனைத்து நகைகளிலும் இந்த ஹால்மார்க் முத்திரை இருக்கும். ஹால்மார்க் முத்திரை வழங்கும் ஒவ்வொரு டீலருக்கும் ஒரு தனிப்பட்ட அடையாளத்துடன் கூடிய முத்திரை இருக்கும். இந்த முத்திரையை வைத்து அதை வழங்கிய டீலரை எளிதாக கண்டுபிடித்துவிட முடியும்.

ஹால்மார்க் முத்திரை என்பதை ஏதோ ஐ.எஸ்.ஐ. முத்திரை போல பொதுவான ஒரு விஷயமாக மக்கள் நினைக் கிறார்கள். தரத்திற்கேற்ப இந்த முத்திரையும் மாறும் என்பதில் கவனம் கொண்டால், நகை வாங்கும்போது நாம் ஏமாற வாய்ப்பில்லை என்பது நிச்சயம்.

0 comments:

Facebook Blogger Plugin: Bloggerized by AllBlogTools.com Enhanced by MyBloggerTricks.com

Post a Comment

Subscribe to RSS Feed Follow me on Twitter!