Sunday 25 January 2015












தற்போது ஆன்லைன் வழியான விற்பனை விறுவிறுப்பாக நடைபெறுகிறது. காலணி முதல் கைபேசி வரை எல்லாவற்றையும் ஆன்லைனில் ஆர்டர் கொடுத்துப் பெற்றுக்கொள்ள முடிகிறது. இணையத் தொழில்நுட்பம் தந்திருக்கும் இந்த வசதி, பலருக்கும் இணையற்றதாகத் தெரிகிறது. 

நேரம் ஒதுக்கி, வாகனத்தில் பயணித்து, போக்குவரத்து நெரிசலில் சலித்து, கடை கடையாய் ஏறி அலுத்துப்போய் பொருள் வாங்கத் தேவையில்லை. அப்போதைக்கு கையில் காசில்லை என்றாலும், பொருளைப் பெற்றுக்கொள்ளும்போது பணம் கொடுத்தால் போதும். விதவிதமான வகைகள், அவற்றுக்கான கண்ணைக் கவரும் படங்கள், வசதிகள் குறித்த தெளிவான விளக்கங்கள், கடைகளில் கிடைப்பதைவிட விலை குறைவு என்று பல விஷயங்கள் மக்களை ஆன்லைன் அலையை நோக்கி இழுக்கின்றன. 

நாளுக்கு நாள் கோடிகளில் பெருகும் வியாபாரமே இதன் அசுர வளர்ச்சிக்குச் சாட்சி. ஆனால் ஆன்லைன் ஷாப்பிங்கிலும் அதிகம் கவனம் தேவை என்பதை சமீபமாய் சில சம்பவங்கள் நிரூபித்து வருகின்றன. இல்லத்தரசி ஒருவர் ஒரு முன்னணி ஆன்லைன் ஷாப்பிங் வலைதளம் வாயிலாக மிக்சி ஒன்றுக்கு ‘ஆர்டர்’ கொடுத்தார். முன்கூட்டியே பணமும் செலுத்தினார். இரண்டொரு நாட்களில் மிக்சி ‘டெலிவரி’ செய்யப்பட்டது. 

பார்சலை பிரித்து கவனித்துப் பார்த்தபோதுதான் அது டூப்ளிகேட் மிக்சி என்று தெரியவந்தது. பிரபல பிராண்ட் போலவே அதன் பெயர் பொறிக்கப்பட்டிருந்தாலும், ஓர் எழுத்து மட்டும் மாறியிருந்தது. அந்த இல்லத்தரசி, குறிப்பிட்ட வலைதளத்தைத் தொடர்புகொண்டு கேட்டபோது, அப்படி இருக்கவே இருக்காது என்று ஆரம்பத்தில் சாதித்தார்கள். தொடர் தொலைபேசி போராட்டத்தின் பின்னர், ‘இடையில்’ ஏதோ தவறு நேர்ந்திருக்கிறது,  நீங்கள் செலுத்திய பணத்தைத் திருப்பித் தந்துவிடுகிறோம்’ என்றார்கள். ஆனாலும் பணம் வந்தபாடில்லை. வெறுத்துப்போன அப்பெண்மணி ஒரு வக்கீல் உதவியை நாட, குறிப்பிட்ட நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதன்பிறகுதான் பணம் வந்து சேர்ந்தது. 

எனவே, விரல் சொடுக்கில் வேலை முடிந்துவிடுகிறதே என்று எண்ணாமல், ஆன்லைன் நிறுவனங்களின் நம்பகத்தன்மையை நன்கு விசாரித்து அறிந்து வாங்குங்கள்!

0 comments:

Facebook Blogger Plugin: Bloggerized by AllBlogTools.com Enhanced by MyBloggerTricks.com

Post a Comment

Subscribe to RSS Feed Follow me on Twitter!