Monday 12 January 2015


திருமணத்துக்கு முன்பு தனிநபராக இருந்த நீங்கள், திருமணத்துக்குப் பின்பு ‘கணவன்’ அல்லது ‘மனைவி’ என்ற புதிய பொறுப்பைப் பெற்றிருக்கிறீர்கள். அந்தப் பொறுப்பில் நீங்கள் எவ்வாறு இருக்கிறீர்கள், வாழ்க்கைத் துணையுடன் உங்களின் நெருக்கம் எந்த அளவு உள்ளது? 





அறிந்துகொள்ள இதோ ஒரு சுயபரிசோதனை...

நீங்கள் போக வேண்டும் என்று விரும்பிய  இடத்துக்கு ஒரு வார கால சுற்றுலா செல்ல உங்களுக்கு நெருக்கமானவர்கள் திட்டமிடுகிறார்கள். ஆனால் உங்கள் வாழ்க்கைத் துணைக்கு அதில் விருப்பமில்லை. அப்போது நீங்கள்?

அ. ‘ஒரு வார காலமா? அவ்வளவு நாட்கள் ஒதுக்க முடியாது. எங்கள் இருவருக்குமே அது சாத்தியமில்லை’ என்று நாசுக்காக கூறிவிடுவேன்.

ஆ. உடனடியாக சுற்றுலாவுக்கு ஒப்புக்கொள்வதோடு, வாழ்க்கைத் துணையையும் அவருக்கு நெருக்கமானவர்களுடன் சுற்றுலாவுக்கு வர ஊக்கப்படுத்துவேன். 

இ. வாழ்க்கைத் துணை வந்தாலும், வராவிட்டாலும் நான் மட்டும் தனியாக சுற்றுலா கிளம்பிவிடுவேன்.

நீங்கள் ஒரு விருந்துக்கு அழைக்கப்பட்டால், அது உங்கள் துணைக்கும் சேர்த்துத்தான் என்று நினைப்பீர்களா?

அ. நிச்சயமாக. நான் அப்படித்தான் நினைப்பேன்.

ஆ. மிகவும் நெருக்கமானவர்கள் விருந்துக்கு அழைத்தால், அதை இருவருக்கும் சேர்த்துத்தான் என்று நினைத்துகொள்வேன். சும்மா பெயரளவுக்கு அழைக்கிறார்கள் என்றால், இரண்டு பேரில் யார் வர வேண்டும் என்று தெளிவுபடுத்திக்கொள்வேன். 

இ. துணையை அழைத்துவரும்படி அழைப்பவர்கள் கூறாவிட்டால், நான் மட்டுமே செல்வேன்.

உங்களின் பள்ளிக்காலத் தோழர்கள் அல்லது தோழிகள் ஒரு சந்திப்புக்கு ஏற்பாடு செய்கிறார்கள். அந்த சந்திப்புக்கு உங்கள் ஜோடியையும் நீங்கள் அழைத்துச் செல்கிறீர்கள் என வைத்துக்கொள்வோம். அதற்கான காரணம் என்னவாக இருக்கும்?

அ. எனது பள்ளிக்காலத் தோழர்கள், தோழிகளை எனது ஜோடியும் அறிந்துகொள்ளவேண்டும் என்ற ஆசைதான் அதற்கான காரணமாக இருக்கும்.

ஆ. பள்ளிக்காலத் தோழர்கள் அல்லது தோழிகளில் எத்தனை பேர் ஜோடியை அழைத்து வருகிறார்கள் என்பதைப் பொறுத்துதான் முடிவெடுப்பேன். எனது பள்ளிக்கால தோழமை பற்றி எனது ஜோடி தெரிந்துகொள்ளவேண்டியது அவ்வளவு அவசியமில்லை என்பதே அதற்கான காரணம்.

இ. வாழ்க்கைத் துணையெல்லாம் வேண்டாம். தனியாகப் போனால்தான் நன்றாக இருக்கும் என்று முடிவெடுத்துவிடுவேன்.

உங்கள் உறவினர்கள், நண்பர்கள் கூடும் இடத்தில் உங்களைவிட உங்கள் ஜோடிக்கு அதிக முக்கியத்துவம் கிடைப்பதை விரும்பமாட்டீர்களா?

அ. ஆமாம். ‘என்னைவிட உனக்கு அதிக முக்கியத்துவம் கிடைப்பது எனக்கு பிடிக்கவில்லை’ என்று கூறிவிடுவேன்.

ஆ. நான் அதைக் கவனிப்பேன். ஆனால் அவசியப்பட்டால் ஒழிய அதில் தலையிட மாட்டேன்.

இ. இதற்கெல்லாம் அலட்டிக்கொள்கிற ஆள் நானில்லை. ஜோடிக்கு அதிக முக்கியத்துவம் கிடைத்தால் கிடைக்கட்டும் என்று விட்டுவிடுவேன்.

உங்கள் ஜோடியை பற்றி உங்களுக்கு நெருக்கமானவர்களின் கருத்து என்ன?

அ. பொருத்தமான துணை என்று பலரும் சொல்லியிருக்கிறார்கள். 

ஆ. சுதந்திர விரும்பி என்று பலர் கூறியிருக்கிறார்கள்.

இ. வெளியே சொல்கிற மாதிரி இல்லை.

உங்கள் உறவினர்களில் எத்தனை பேருக்கு உங்கள் ஜோடியை பற்றி நன்கு தெரியும்?

அ. அனைவருக்குமே என் ஜோடியை பற்றி தெரியும்.

ஆ. எனது குடும்பத்தினருக்கும், சில நெருங்கிய சொந்தங்களுக்கு மட்டும்தான் தெரியும்.

இ. யாருக்கும் எனது ஜோடியை பற்றி எந்த தகவலும் தெரியாது.

உங்கள் ஜோடியோடு நீங்கள் எவ்வளவு நெருக்கமாக இருக்கிறீர்கள் என்று இப்போது தெரிந்துகொள்ளலாம்!

அதிகமாக ‘அ’ என்றால்: நிச்சயமாக நீங்கள் மிகவும் நெருக்கமான ஜோடி. அதற்காக நீங்கள் சந்தோஷப்படலாம். இன்றைய உங்கள் வாழ்க்கை ரொம்ப மகிழ்ச்சியாகவே இருக்கும். ஆனால் இந்த நெருக்கத்தைத் தாண்டி இருவருக்கும் சில ஆசைகள் இருக்கும். அதனால் உலகமே உங்கள் ஜோடிதான் என்று நினைத்துக்கொண்டிருக்காமல், உங்களுக்கென்று நல்ல பொழுதுபோக்குகளை உருவாக்குங்கள்.  நண்பர்கள், உறவினர்களோடு மனம்விட்டு பேசிப் பழகுங்கள்.

அதிகமாக ‘ஆ’ என்றால்: உங்கள் உறவில் நல்ல சமநிலை நிலவுகிறது. இதே நிலையைத் தொடர்ந்து பராமரிக்கலாம். அவ்வப்போது ஜோடியின் மனநிலையை உணர்ந்து, அவருக்கு தக்கபடி உங்களிடமும் தொடர்ந்து நல்ல மாற்றங்களை உருவாக்கி, இதே புரிதலை நிரந்தரமாக்குங்கள்.

அதிகமாக ‘இ’ என்றால்: நீங்கள் ஒரு தனிமை விரும்பி. எல்லாவற்றுக்கும்  துணையைப் பிடித்துக் கொண்டு தொங்காதது நல்ல விஷயம்தான். ஆனால் திருமணத்துக்குப் பின்னும் தனிநபராக நீங்கள் விலகியே இருப்பது சரிதானா என்று யோசிக்க வேண்டும். திருமணத்திற்கு பிறகும் தனிமையை விரும்புவது வாழ்க்கையை பாதிக்கும். அதனால் ஜோடியோடு நெருக்கம்காட்டி வாழ்க்கையை எப்படி எல்லாம் மகிழ்ச்சியாக்கலாம் என்பது பற்றி உடனடியாக நல்ல முடிவை எடுங்கள்.

0 comments:

Facebook Blogger Plugin: Bloggerized by AllBlogTools.com Enhanced by MyBloggerTricks.com

Post a Comment

Subscribe to RSS Feed Follow me on Twitter!